"ஐயோ அடிக்காதீங்க...." அலறிய லாரி ஓட்டுநர் அடித்துக் கொன்ற உரிமையாளர்

0 1038

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மது போதையில் லாரியை ஓட்டிச் சென்று அரசுப் பேருந்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய ஆத்திரத்தில், லாரி ஓட்டுநரை அதன் உரிமையாளர் மகன் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஓட்டுநரைத் தாக்கியபோது, தாங்களே எடுத்த வீடியோவால் சிக்கிக் கொண்டவர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...  

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் வேலூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் வாத்துகளை ஏற்றிச் செல்லும் லாரியில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஏழாம் தேதி காஞ்சிபுரத்திலிருந்து செங்கம் வழியாக வேலூர் சென்று கொண்டிருந்தபோது, கடலாடி புறவழிச்சாலையில் எதிரே வந்த அரசுப் பேருந்து மீது லாரி உரசி விபத்து ஏற்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையில் ஹரிஷ் மது அருந்தி இருந்தது தெரியவந்த நிலையில், லாரி பறிமுதல் செய்யப்பட்டு கடலாடி காவல் நிலையம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த ரமேஷ், அபராதம் மற்றும் பேருந்து பழுது பார்ப்புக்காக என சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் கட்டிவிட்டு,விசாரணை தேவைப்படும்போது அழைத்து வருவதாகக் கூறி, ஹரிஷை தன்னுடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அபராதம் செலுத்தியும் லாரியை திருப்பித் தராமல் வழக்குப்பதிவு, நீதிமன்றம் என போலீசார் ரமேஷை அலைக்கழித்ததாகக் கூறப்படும் நிலையில், ரமேஷின் கோபம் ஓட்டுநர் ஹரிஷ் பக்கம் திரும்பியுள்ளது.

ரமேஷின் மகன் மேகநாதன், தனது உறவினர் விஜயகுமார் என்பவருடன் சேர்ந்து ஓட்டுநர் ஹரிஷை தனியாக அழைத்துச் சென்று கை, கால்களைக் கட்டி விட்டு, தந்தை ரமேஷை வாட்சப் வீடியோ காலில் அழைத்துள்ளார்.

ஹரிஷை எப்படி அடிக்க வேண்டும் என்று ரமேஷ் சொல்லச் சொல்ல விஜயகுமாரும் மேகநாதனும் சேர்ந்து அதேபோல் அடித்து சித்ரவதை செய்து, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

அடி தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் ஹரிஷ் உயிரிழந்த நிலையில், வாத்துகளுக்கு தீவனம் எடுத்துச் செல்லும் சாக்குப்பையில் அவரது உடலைக் கட்டி செய்யாற்றுப் படுகையில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

ஹரிஷை கொலை செய்தபோது எடுத்த வீடியோக்களை மேகநாதன் தனது நண்பர்களுக்கு அனுப்பவே, அது இணையத்தில் பரவி போலீசாரின்கவனத்துக்குச் சென்றது.

எந்த நேரமும் தாங்கள் கைது செய்யப்படலாம் என்று உணர்ந்த மேகநாதனும் விஜயகுமாரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments